Wednesday, March 16, 2011

குழந்தையின் மனதை கெடுப்பது பெற்றோர்களா?


ன்று மனித உரிமைகள் பற்றி உலகம் முழுக்க பேசப்படுகிறது

அது பறிக்கப்படும் போதோ நசுக்கப்படும் போதே போரட்டங்களும் வலுக்கிறது

சில மனித உரிமை ஆர்வலர்கள் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நம்முன்னால் வைக்கிறார்கள்

மதம் என்பது தனிமனித விஷயம் அதை பிறர்மீது திணிப்பது சட்டப்படி குற்றம் மட்டுமல்ல தர்மத்தை மீறிய செயலுமாகும்

நமது குழந்தைகளிடத்தில் கூட நம் கருத்துக்கள நம்பிக்ககளை நுழைக்க கூடாது என்கிறார்கள்

கடவுளோடு நேரடியாக உறவு வைத்துக் கொள்ளும் மனித பருவம் எது என்றால் அது குழந்தைப் பருவம் என்று துணிந்து கூறலாம். 

 அதனால் தான் இயேசு நாதர் குழந்தையை போல எவன் ஆகிறானோ அவனே தேவனுக்கு பிரியமானவன் என்று சொல்கிறார். 

குழந்தையை போல் என்றால் கை சூப்பிக் கொண்டு சேற்றில் விழுந்து உடலெல்லாம் பூசிக் கொள்வது என்பதல்ல.

  மனதில் களங்கமில்லாமல் பாராபட்சமில்லாமல் இருப்பதாகும்.

 உங்கள் முகத்தை நன்றாக கண்ணாடியில் பாருங்கள்.

 அது எவ்வளவு அவலட்சனமாகயிருக்கிறது என்று தெரியும். 

ஒரு குழந்தையின் முகத்தை பாருங்கள்.

 மூக்கு ஒழுகி அழுக்கு படிந்து இருந்தாலும் உண்மையான அழகு அங்கு வெளிச்சமாகயிருப்பது தெரியும்.

அதற்கு காரணம் என்ன? நம் மனதில் ஆசையிருக்கிறது, காமம் இருக்கிறது, கோபம் இருக்கிறது.

 ஆனால் குழந்தையிடம் இவைகள் எதுவுமேயில்லை.

  சுத்தமான பளிங்கு போல் குழந்தையின் மனம் எப்போதும் இருக்கிறது.

  ஒரு தாய் தன் குழந்தைக்கு பால் கொடுப்பதை கூட வக்கிரமாக பார்ப்பது தான் வளர்ந்த மனிதனின் கொடூர குணம்,

ஆனால் குழந்தை அப்படியாகவா இருக்கிறது?

  அப்படிப்பட்ட பரிசுத்தமான குழந்தையை கூப்பிட்டு விபூதி பூசு, நீ சிலுவை போடு, தூங்காமல் எழுந்து தொழுகைக்கு போ, நீ முஸ்லிம், அவன் இந்து, என்றெல்லாம் பாகுபாட்டை விதைப்பது எப்படி நியாயமாகும்?

   அவன் வளரட்டும்.  அறிவு பெறட்டும்.  அதன் பிறகு அவன் தனக்கு உகந்த மதம் எது கொள்கை எது, தத்ததுவம் எது என முடிவு செய்யட்டும்.  அது தானே சரியாகும்.


 அதை விட்டுவிட்டு கரும்பலகை போல் எந்த வித கிறுக்கல்களும் இல்லாத பிள்ளை மனங்களில் நமது எண்ணங்களை எழுத நமக்கு என்ன உரிமையிருக்கிறது என்று கேட்பது நியாயமாகவும் இருக்கலாம்.

 மிகச் சிறந்த மனிதாபிமானம் போல் கூடத் தோன்றலாம். 

ஆனால் இது நடைமுறைக்கு உகந்தது ஆகாது. 

நான் ஒரு இந்து.  காலையில் எழுந்தவுடன் சந்தியாவந்தனம் செய்கிறேன்.  பூஜை அறையில் சில நிமிடங்களாவது கடவுள் படத்திற்கு கற்பூரம் காட்டுகிறேன்.

 என் மனைவியும் அமாவாசை, கிருத்திகை என்று விரதம் இருக்கிறாள்.

  இதையெல்லாம் பார்க்கும் என் மகளும், மகனும் கண்களை மூடிக் கொண்டா வீட்டிற்குள் நடமாடுவார்கள்?

.  அம்மா, அப்பா செய்வதை தானே குழந்தைகளும் செய்ய பிரியபடும்?

  குழந்தைகளுக்காக எனது வழிபாட்டு உரிமையை இழப்பது கூட தானே மனித உரிமை பிரச்சனையாகும்?

  எனக்கு தெரிந்த சமய உண்மைகளை என் குழந்தைகளுக்கு போதிப்பது என் கடமையாகும்.

 வேண்டுமென்றால் அந்த போதனையில் துவேஷத்தை வளர்க்க கூடாது என சட்டங்கள் கூறலாமே தவிர என் கடமையை செய்ய எந்த சட்டமும் குறுக்கே வரக்கூடாது.

  எதாவது ஒரு மதக் கோட்பாட்டில் முழு நம்பிக்கை வைத்து வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக நிச்சயம் வருவார்கள்.

 இராமாயணம் கேட்டு வளர்நத வீர சிவாஜி, அரிச்சந்திரா நாடகம் பார்த்து வளர்ந்த காந்தி போன்றோர்களே இதற்கு சரியான உதாரணமாகும்.

 இன்னொரு முக்கியமான விஷயம் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது கூட தவறல்ல.

 ஒழுக்கத்திலும், கட்டுப்பாட்டிலும், நம்பிக்கையில்லாமல் வளர்வது மாபெரும் அபாயமாகும்.

 குழந்தைகளுக்கு எந்த போதனையும் இல்லாது வளர்த்தால் அவர்கள் வருங்காலத்தில் கெட்டவர்களாகவும் கெடுதி செய்வதில் ஆர்வம் உடையவர்களாகவும் ஆவதை கண்கூடாக பார்த்துயிருக்கிறேன். 

எனவே மனித உரிமை மீறல் என்பது போதனை விஷயத்தில் கிடையாது. 

ஆரம்பத்தில் எதாவது ஒரு மதத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவோ அல்லது அப்பா அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால்  நாஸ்திகவாதிகளாக கூட குழந்தைகளை வளர்க்கலாம்.

 வயதும் அறிவும் முதிர்ச்சி அடையும் போது தங்களை தாங்களே திருத்திக் கொள்வார்கள்.

No comments: